சீனாவில் வெள்ள பாதிப்பு; பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு
சீனாவில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்து உள்ளது.
பீஜிங்,
சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன. இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்து பலத்த மழை பெய்து வருகிறது.
வரலாறு காணாத கனமழையை பெற்ற அந்த மாகாணத்தின் ஜெங்ஜவ், ஜிங்ஜியாங், எனியாங் மற்றும் ஹெபி ஆகிய 4 நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. தவிர பல்வேறு நகரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கடந்த 17ந்தேதி முதல் ஜெங்ஜவ் நகரில் கனமழை தீவிரமடைந்தது. ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழையானது 3 நாட்களில் பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனா மிக அதிகபட்ச மழையை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் பலியானார்கள்.
இந்த பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33 ஆக உயா்ந்துள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவித்தது. மழையை முன்னிட்டு ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.
மொத்தம் 12.9 லட்சம் பேர் மழை, வெள்ளத்திற்கு பாதிப்படைந்து உள்ளனர். சுரங்க பாதைகள், தெருக்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன. இதனால் பொது போக்குவரத்து பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது.
கனமழை தொடர்ந்து இருக்க கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது. இதில், ஞாயிற்று கிழமை வரையில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை இன்னும் காணவில்லை. 8.52 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இந்த எண்ணிக்கை 71 ஆக உயர்வடைந்து உள்ளது. 9,72,100 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதுபற்றி சீனாவின் ஹெனான் மாகாண நீர்வள துறை அதிகாரிகள் கூறும்போது, மாகாணத்தின் சில பகுதிகளில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பெய்யும் மழை அளவானது பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளனர்.
சீனாவில் மழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள நேரடி வர்த்தக பாதிப்பு ரூ.ரூ.77 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.