அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தியவர்களும் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தல்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-07-28 10:37 GMT
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. 

இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக அரசு அறிவித்தது. மேலும் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அமெரிக்க அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், மருத்துவ நிபுணர்கள் அரசின் இந்த அறிவிப்பிற்கு அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று புதிதாக 61 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல், மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அமெரிக்காவில் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் ரோசெல் வலென்ஸ்கி கூறியதாவது;-

“தடுப்பூசி செத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வேளையில் டெல்டா வகை வைரஸ் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது புதிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே கணிசமான மற்றும் அதிக வைரஸ் பரவல் உள்ள பகுதிகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் உள்பட அனைவரும் பொது உட்புற இடங்களில் முக கவசங்களை அணியுமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரை செய்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்