ஓமனில் இஸ்ரேல் நாட்டு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 2 மாலுமிகள் பலி

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து மர்மமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Update: 2021-07-31 01:37 GMT
இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறது.‌ இந்த நிலையில் ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 300 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டின் எண்ணெய் கப்பல் மீது‌ தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் இயால் ஓபருக்கு சொந்தமான இந்த கப்பல் 
தான்சானியா நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று கொண்டிருந்தபோது ஓமன் நாட்டு கடலில் தாக்குதலுக்கு ஆளானதாக இங்கிலாந்து கடற்படை தெரிவித்தது. அதேவேளையில் கப்பலில் என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டது? அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

அதே போல் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலும், ஓமன் தரப்பிலும் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே தங்களது எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இங்கிலாந்து மற்றும் ருமேனியாவை சேர்ந்த 2 மாலுமிகள் கொல்லப்பட்டதாக சோடிக் நிறுவனம் ெதரிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதல் பற்றிய கூடுதல் விவரங்களை அந்த நிறுவனம் வழங்கவில்லை. அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இஸ்ரேல் நாட்டு எண்ணெய் கப்பல் மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்