ஆஸ்திரேலியா: பிரிஸ்பேன் உள்பட 11 நகரங்களில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவில் 11 நகரங்களில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-07-31 20:35 GMT
கோப்புப்படம்
குயின்ஸ்லாந்து,

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்திலேயே தீவிர நடவடிக்கைகள் மூலம் அதனை கட்டுக்குள் கொண்டு வந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி உள்ளது.

அங்கு கடந்த மாதத்தின் பிற்பகுதியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்க தொடங்கி உள்ளதால் மாகாண தலைநகர் பிரிஸ்பேன் உள்பட 11 நகரங்களில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கை மாகாண அரசு அமல்படுத்தி உள்ளது.

ஊரடங்கு நகரங்களின் பட்டியலில் பிரிஸ்பேன், இப்ஸ்விச், லோகன், மோரேடன் பே, ரெட்லேண்ட்ஸ், சன்ஷைன் கோஸ்ட், கோல்ட் கோஸ்ட், நூசா, சோமர்செட், லாக்யர் பள்ளத்தாக்கு மற்றும் இயற்கை ரிம் ஆகியவை அடங்கும்.

ஊரடங்கில் உள்ள நகரங்களில் வாழும் பொதுமக்கள் மருத்துவ காரணங்களுக்காக, மளிகைப் பொருட்கள் அல்லது மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காகவும், வேலைக்குச் செல்வதற்கும், படிப்பதற்கு செல்வதற்கும், தங்கள் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் உடற்பயிற்சி செய்ய செல்வதற்கும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்