ஓமன் வளைகுடாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டதால் பரபரப்பு

ஓமன் வளைகுடாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-05 01:38 GMT
துபாய்,

உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து மர்மமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான் ஒவ்வொரு முறையும் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.‌

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓமன் நாட்டின் மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான ‘எம்.வி. மெர்சர் ஸ்ட்ரீட்' என்கிற எண்ணெய் கப்பல் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்து மற்றும் ருமேனியாவை சேர்ந்த 2 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பை ஏற்காத நிலையில் ஈரானே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு உள்ளிட்டவையும் ஈரான் மீது குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் ஈரான் வழக்கம்போல இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கூறி மறுத்துள்ளது.‌

இந்த நிலையில் ஓமன் வளைகுடா பிராந்தியத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடலில் சென்று கொண்டிருந்த அந்த நாட்டின் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்வி அஸ்பால்ட் பிரின்சஸ்' என்கிற எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டதாக இங்கிலாந்தை சேர்ந்த கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

அந்த பதிவில் ‘‘பனாமா நாட்டு கொடியுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பலை சுற்றிவளைத்த கடத்தல்காரர்கள் ‌ பயங்கர ஆயுதங்களுடன் கப்பலுக்குள் நுழைந்து அந்த கப்பலை கடத்தினர். பின்னர் அவர்கள் கப்பலை ஈரானை நோக்கி செலுத்துமாறு கேப்டனுக்கு கட்டளையிட்டனர்’’ என கூறப்பட்டது.

இந்தத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர்ந்து உலக நாடுகள் பலவும் மீண்டும் ஈரானை குற்றம் சாட்டின. ஈரான் கடற்படையினரே இந்த எண்ணெய் கப்பலை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இது ஈரானுக்கு எதிரான விரோத நடவடிக்கையின் ஒரு பகுதி என கூறி ஈரான் அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

இதனிடையே எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டதாக தகவல் வெளியான சில மணி நேரங்களுக்கு பின்னர் அந்த கப்பல் விடுவிக்கப்பட்டதாகவும், கடத்தல்காரர்கள் அனைவரும் கப்பலில் இருந்து வெளியேறி விட்டதாகவும் இங்கிலாந்து கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது. மேலும் கப்பலில் உள்ள மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது. எனினும் இந்த கடத்தல் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை அந்த நிறுவனம் வழங்கவில்லை.

மேலும் செய்திகள்