ஆஸ்திரேலியாவில் தீவிரமாகும் டெல்டா வகை கொரோனா - மேலும் ஒரு நகரில் ஊரடங்கு அமல்

ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் அங்கு மேலும் ஒரு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-08-12 05:37 GMT
சிட்னி,

கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது.

அங்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.

குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7-வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை.

நேற்று ஒரே நாளில் மட்டும் சிட்னி நகரில் 344 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர் அந்த கொடிய வைரசுக்கு பலியாகினர். இதையடுத்து அந்த நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிட்னி நகரில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டப்போ என்கிற நகரில் 2 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த நகரில் ஒரு வார காலத்துக்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஆஸ்திரேலியாவின் 2-வது மிகப்பெரிய நகரும், விக்டோரியா மாகாணத்தின் தலைநகரமான மெல்போர்ன் நகரில் கடந்த இரு தினங்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அங்கு ஏற்கனவே ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மெல்போர்ன் நகரில் வருகிற 19-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விக்டோரியா மாகாணத்தின் முதல் மந்திரி டான் ஆண்ட்ரூஸ் கூறுகையில் ‘‘மெல்போர்ன் நகரில் நேற்று ஒரு நாளில் 20 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் ஆகஸ்டு 19-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டால் சிட்னியில் தற்போது என்ன நடக்கிறதோ அதை மெல்போர்னில் பார்க்க வேண்டியிருக்கும். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்’’ என‌ கூறினார்.

இதனிடையே சிட்னி நகரில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கட்டிடத் தொழிலாளர்கள் தங்கள் வேலைக்குத் திரும்பலாம் என கட்டுமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மேலும் செய்திகள்