உம் அல் குவைன் துறைமுகத்தில் நின்ற கப்பலில் பயங்கர தீ விபத்து

உம் அல் குவைன் துறைமுகத்தில் நின்று கொண்டு இருந்த கப்பலில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கப்பல் தீயில் எரிந்து முழுவதும் சேதமடைந்தது.

Update: 2021-08-24 01:26 GMT
கப்பலில் திடீர் தீ விபத்து
உம் அல் குவைனில் உள்ள அல் ரபா என்ற பகுதியில் துறைமுகம் உள்ளது. பன்னாட்டு கப்பல்கள் மற்றும் மீன்பிடி கப்பல் மற்றும் படகுகள் அதிக அளவில் இங்கு இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீன்பிடி மற்றும் சரக்கு ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட கப்பல் அங்கு நங்கூரமிடப்பட்டு இருந்தது. திடீரென நேற்று மதியம் அந்த கப்பலில் தீப்பிடித்தது.இதை பார்த்து பதறிப்போன ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ கொழுந்துவிட்டு மள மளவென கப்பல் முழுவதும் பற்றி எரிந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முழுவதும் சேதமடைந்தது
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.கரும்புகையை கக்கியபடி பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்ததால் ராசல் கைமா பகுதியில் உள்ள தீயணைப்பு படையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர். இருதரப்பு தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.அதற்குள் அந்த கப்பலின் முக்கால் பாகம் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் நீண்ட நேரம் கரும்புகை சூழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கு எந்த காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை.தீ விபத்துக்கான காரணம் குறித்து உம் அல் குவைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்