சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர்.

Update: 2021-09-11 17:39 GMT
கியாஸ் சிலிண்டரில் கசிவு
சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணம் டேலியன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு உள்ள வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்தன.இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்
இதைத்தொடர்ந்து வீட்டில் தீப்பிடித்தது‌. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த‌ தீ கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.அதிகாலை நேரம் என்பதால் அடுக்குமாடி குடியிருப்பின் வீடுகளில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பின்னர் வீடுகளில் தீப்பற்றி எரிவதை உணர்ந்து அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்
இதையடுத்து அவர்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓட தொடங்கினர்.எனினும் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.இதனிடையே இந்த தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

8 பேர் உடல் கருகி பலி
அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.அதேவேளையில் வீடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.‌

மேலும் செய்திகள்