வடகொரியா ஏவுகணை சோதனை: அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச சமூத்திற்கு அச்சுறுத்தலானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Update: 2021-09-13 03:25 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா மீதான மோதலை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுத வல்லமை கொண்ட வடகொரியா தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. 

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தற்போது வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கி அதிர வைத்துள்ளது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக இந்த ஏவுகணை உள்ளது. 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா சோதனை செய்த இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனையில் ஈடுபடாத வடகொரியா தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

இந்த நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து  கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவம்,  வடகொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்