ஐ.நா. மனித உரிமை ஆணைய குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு

இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் அந்த நாட்டு அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-14 21:50 GMT
இதனால், நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் இலங்கையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பேஷேலெட் இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார அவசரநிலையால் பொது செயல்பாடுகளில் ராணுவத்தின் தலையீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் ராணுவ தலையீடு குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் குற்றச்சாட்டை இலங்கை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், தகவல் மந்திரியுமான டல்லஸ் அழகப்பெருமா இதுகுறித்து கூறுகையில் " எந்த ராணுவமயமாக்கலும் இல்லை. உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் அவசரகால விதிமுறைகளில் 2 உட்பிரிவுகளை திருத்தியது. உணவு பாதுகாப்பு பிரச்சினையில் ராணுவத்துக்கு ஒரு வரையறுக்கப்பட்ட பங்கு இருக்கும்." என கூறினார்.

மேலும் செய்திகள்