பிரான்ஸ் நடத்திய தாக்குதலில் ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வந்த ஐ.எஸ். அமைப்பின் தலைவன் பலி

பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன் உயிரிழந்தார்.

Update: 2021-09-16 02:35 GMT
பமாகோ,

மாலி, பர்கினோ பாசோ, நைஜர் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் இன் கிரேட்டர் சஹாரா (ஐ.எஸ்.ஜி.எஸ்.) என்று பெயர் கொண்ட இந்த பயங்கரவாத அமைப்பு ஆப்பிரிக்க நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனாக அதான் அபு வாலிட் அல் ஷராவி என்பவர் செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில், இந்த பயங்கரவாத அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில் மாலி, பர்கினோ பாசோ, நைஜர் ஆகிய நாடுகளுக்கு பிரான்ஸ் உதவி வருகிறது. இதற்காக பிரெஞ்சு படைகள் மாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் மாலியில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீது அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஆப்பிரிக்க ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அதான் அபு வாலிட் அல் ஷராவி கொல்லப்பட்டுள்ளார். 

இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஜி.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் ஷராவி கொல்லப்பட்டுள்ளபோதும் மாலியில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பிரான்ஸ் தொடர்ந்து ஈடுபடும் என மெக்ரான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்