ஆப்கானிஸ்தானில் மகளிர் விவகாரங்கள் அமைச்சகத்துக்கு மூடுவிழா

ஆப்கானிஸ்தானில் மகளிர் விவகாரங்கள் அமைச்சகம் மூடப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-09-18 21:36 GMT
காபூல், 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்த போருக்குப் பின்னர், அந்த நாட்டை தலீபான் பயங்கரவாதிகள் அமைப்பு கடந்த மாதம் 15-ந் தேதி கைப்பற்றியது. இதனால் ஜனநாயகம் அங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டது. எல்லா தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு அரசை அமைக்க தலீபான்கள் தவறி விட்டனர். இது சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்களுக்கும், அவர்களது முன்னேற்றத்துக்கும் எதிரான போக்கை தலீபான்கள் கைவிடவில்லை. அங்கு மகளிர் விவகாரங்கள் அமைச்சகத்துக்குள் பெண் ஊழியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அமைச்சகமும் மூடப்பட்டு விட்டது. அந்த அமைச்சகத்துக்கு பதிலாக புதிதாக அறநெறி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி பெண் ஊழியர்கள் கூறும்போது, பல வாரங்களாக நாங்கள் பணிக்குத் திரும்ப முயற்சித்தாலும், கடைசியாக நாங்கள் வீடுகளுக்கு திரும்புமாறு கூறி விட்டனர் என வேதனையுடன் தெரிவித்தனர். அமைச்சகங்களில் ஆண் ஊழியர்களுடன் பெண் ஊழியர்கள் இணைந்து பணியாற்றுவதை அனுமதிக்க மாட்டோம் என்று தலீபான்கள் அமைப்பின் மூத்த தலைவர் கூறியது நினைவு கூரத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டில் பெண்கள் போராடி அடிப்படை உரிமைகளைப் பெற்றதும், எம்.பி.க்களாகவும், நீதிபதிகளாகவும், விமானிகளாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும் ஆனதும் இப்போது பழங்கதையாக மாறி விட்டது.

மேலும் செய்திகள்