ஐ.எஸ். அமைப்பை கட்டுப்படுத்த முயற்சிக்கும் தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-27 23:52 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றினர். அந்நாட்டில் தற்போது தலீபான்கள் இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர். 

தலீபான்கள் ஆட்சியமைத்துள்ள போதும் அந்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஹரசன் பிரிவு போன்ற பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. 

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். ஹரசன் அமைப்பும் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 26-ம் தேதி காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். ஹரசன் அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 182 பேர் உயிரிழந்தனர். 

இதனை தொடர்ந்து தலீபான்கள் மீதும் ஐ.எஸ். ஹரசன் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காபூல், ஜலாலாபாத், மசர்-ஐ-ஷரிப் ஆகிய பகுதிகளில் தலீபான்களை குறிவைத்து கடந்த சில நாட்களாக ஐ.எஸ்.ஹரசன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 35 தலீபான்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இதை தலீபான்கள் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். ஹரசன் அமைப்பினரை குறிவைத்து தலீபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 80-க்கும் அதிகமான ஐ.எஸ். அமைப்பினரை தலீபான்கள் கைது செய்துள்ளனர். மேலும், ஐ.எஸ். ஹரசன் அமைப்பினரின் முன்னாள் தலைவன் உள்பட பலரை தலீபான்கள் கொலை செய்துள்ளனர். 

மேலும், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பினரை தங்களுக்கு போட்டியாக வளரவிடக்கூடாது என்பதில் தலீபான்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து தலீபான்கள் - ஐ.எஸ்.ஐ.எஸ். இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்