எங்களிடம் ஒரு லட்சம் வீரர்கள் உள்ளனர் - ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தங்களிடம் ஒரு லட்சம் வீரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Update: 2021-10-18 21:25 GMT
பெய்ரூட்,

லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற வெடிவிபத்தில் 215 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. 

அந்த வகையில், பெய்ரூட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் கடந்த வியாழக்கிழமை அங்கு வன்முறை வெடித்தது. இதில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், தங்களிடம் ஒரு லட்சம் வீரர் உள்ளதாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹசன் நசருல்லா தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா தலைவன் ஹசன் நசருல்லா தெரிவித்த தகவல் உண்மையாகும்பட்சத்தில் இது லெபனான் அரசுப்படையின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். 

லெபனான் அரசுப்படை 85 ஆயிரம் வீரர்களை கொண்ட ராணுவமாகும். தங்களிடம் ஒரு லட்சம் வீரர்கள் உள்ளனர் என ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவன் தெரிவித்துள்ள கருத்தால் லெபனானில் விரைவில் உள்நாட்டு போர் ஏற்பட வழிவகுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்