பாகிஸ்தான் சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுதலை

20 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நாளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Update: 2021-11-14 10:22 GMT
கோப்புப்படம்

லாகூர்,

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில்  20 இந்திய மீனவர்கள் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றனர். தற்போது அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாளை வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று மூத்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சிறை கண்காணிப்பாளர் இர்ஷாத் ஷா கூறுகையில், தண்டனை பெற்றவர்கள் பெரும்பாலும் குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள்.  நான்கு வருடங்கள் சிறையில் இருந்த அவர்கள், தற்போது அரசாங்கத்தின் நல்லெண்ணச் செயலாக விடுவிக்கப்பட்டுள்ளனர், என்று இர்ஷாத் ஷா கூறினார். எதி டிரஸ்ட் அறக்கட்டளை என்ற  இலாப நோக்கற்ற சமூக நல அமைப்பானது, மீனவர்களை லாகூரில் உள்ள வாகா எல்லைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. அங்கிருந்து அவர்கள் நாளை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

பாகிஸ்தான் அரசாங்கம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் 20 இந்திய மீனவர்களையும், 2019 ஏப்ரலில் 100 இந்திய மீனவர்களையும்  நல்லெண்ணச் செயலாக விடுவித்து இருந்தது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் பொதுவாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதற்காக கைது செய்யப்பட்டடு சிறைகளில் அடைக்கப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அரபிக்கடலில் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே தெளிவான எல்லைக் கோடு இல்லாததால், இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டிவிடுவது தொடர்கதையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்