ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

Update: 2021-11-18 00:03 GMT
நியூயார்க்,

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உளள ஐ.நா.சபை தலைமையகத்தில், அதன் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐ.நா. சபைக்கான பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் பங்கேற்று பேசியபோது காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார்.

இதற்கு ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகரும், காஷ்மீரை சேர்ந்தவருமான டாக்டர் கஜல் பட் சரியான பதிலடி கொடுத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் இந்தியா இயல்பான உறவினை பேணுவதற்கு விரும்புகிறது. பாகிஸ்தானுடன் பிரச்சினைகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அதை சிம்லா உடன்படிக்கை மற்றும் லாகூர் பிரகடனம் ஆகியவற்றின்படி இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலமாக அமைதித்தீர்வு காண உறுதியாக உள்ளது.

இருப்பினும், பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம், வன்முறை ஆகியவை இல்லாத ஒரு சூழலில்தான் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த முடியும். அத்தகைய ஒரு சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு, பாகிஸ்தானுக்கு உள்ளது. அதுவரையில் இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான, முடிவான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்.

இன்றைக்கு பாகிஸ்தான் பிரதிநிதி இந்த அவையில் எழுப்பிய அற்பமான கருத்துகளுக்கு நான் பதிலடி கொடுக்க களம் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பாகிஸ்தான் பிரதிநிதி, இத்தகைய அவைகளை தவறான, தீங்கு இழைக்கிற பிரசாரங்களை பரப்புவதற்கு தவறாக பயன்படுத்துகிறார். பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருகிற நாடு பாகிஸ்தான். ஆனால் உலகின் கவனத்தை திருப்புவதற்காக பாகிஸ்தான் வீண் முயற்சி செய்கிறது. பாகிஸ்தான் இப்படி செயல்படுவது இது முதல் முறை அல்ல.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை, உதவுவதை, தீவிர ஆதரவு அளிப்பதை கொள்கையாக கொண்டிருக்கிற வரலாறு உள்ள நாடு. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதி உள்பட ஒட்டுமொத்த காஷ்மீரும், லடாக்கும், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாக தொடரும். பாகிஸ்தான் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை உடனடியாக காலி செய்ய வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்