லிபியாவில் இருந்து ஐரோப்பா செல்ல முயன்று நடுக்கடலில் சிக்கித்தவித்த 302 அகதிகள் மீட்பு

லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல முயன்று நடுக்கடலில் சிக்கித்தவித்த 302 அகதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

Update: 2021-11-20 07:34 GMT
திரிபோலி:

வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக ரப்பர், பைபர் உள்ளிட்ட படகுகள் மூலம் அதிக எண்ணிக்கையில் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் சுலபமாக நுழைந்துவிடலாம் என்ற நோக்கில் உள்நாட்டுப்போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகளும் இந்த பயணத்தில் சட்டவிரோதமாக ஈடுபடுகின்றனர்.

ஆபத்தான இந்த பயணத்தில் பல்வேறு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆகையால், லிபிய நாட்டு கடற்படையினர் தங்கள் கடல் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் திரிபோலி கடல் எல்லை வழியாக ஐரோப்பாவுக்கு நுழையன்று நடுக்கடலில் சிக்கித்தவித்த 302 அகதிகளை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் லிபியாவில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்கப்பட்ட 302 பேரில் 50 பேர் பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் என ஐநாவின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.  

மேலும் செய்திகள்