முன்னெச்சரிக்கையை பின்பற்றினால் திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் கொண்டாடலாம் - ஜோ பைடன்

அமெரிக்காவில் 50 கோடி (500 மில்லியன்) பேருக்கு இலவசமாக கொரோனா விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-22 09:49 GMT
வாஷிங்டன்,

சீனாவில் தோன்றிய கொரோனாவால், உலகின் பிற எந்த நாட்டையும் விட வல்லரசு நாடான அமெரிக்காதான் கூடுதல் பாதிப்புக்கு ஆளானது. இப்போது தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டு உலகமெங்கும் கால் பதித்து வருகிற ஒமைக்ரானும் அமெரிக்காவை பதம்பார்க்கத் தொடங்கி இருக்கிறது.

ஒமைக்ரான் தொற்றுக்கு உலக அளவில் முதல் பலியை இங்கிலாந்து பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவிலும் ஒமைக்ரான் முதல் களப்பலியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 50 வயது கடந்த ஒருவர் இந்த தொற்றால் இறந்துள்ளார். இவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர், ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு ஆளானவர் என தகவல்கள் கூறுகின்றன.

தற்போது அமெரிக்காவில் பெருந்தொற்று பாதிப்புக்குள்ளாகிற பலருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்புதான் உறுதியாகி வருகிறது. ஒரே வாரத்தில் 6½ லட்சம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. 

இந்நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் 50 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மேலும், கூடுதலாக 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"வீட்டிலேயே ரேபிட் கொரோனா சோதனைகள் மேற்கொள்ள வசதியாக 50 கோடி (500 மில்லியன்) பரிசோதனை கிட்களை வாங்குகிறோம். விரும்பும் அமெரிக்கர்களுக்கு அவை இலவசமாக விநியோகிக்கப்படும். இந்த வார இறுதியில் விடுமுறையைப் பாதுகாப்பாகக் கொண்டாட முடியுமா என்று யோசிக்கும் அமெரிக்கர்களுக்கு:ஆம்,உங்களால் முடியும் என்பதே எனது பதில். ஆனால்,நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால்,நீங்கள் திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட முடியும் என்றார்.

மேலும் செய்திகள்