ஈரான் புரட்சிப்படை தளபதி நினைவு தினம்: ஹேக் செய்யப்பட்ட இஸ்ரேல் செய்தி நிறுவன இணையதளம்...!

ஈரான் புரட்சிப்படை தளபதி காசிம் சுலைமானி கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்கப்படையின் தாக்குதலால் கொல்லப்பட்டார்.

Update: 2022-01-03 05:25 GMT
ஜெருசலேம்,

ஈரான் நாட்டின் புரட்சிப்படை தளபதியாக செயல்பட்டு வந்தவர் காசிம் சுலைமானி. இந்த குவாட் படை என்று அழைக்கப்படும் இந்த புரட்சிப்படை ஈரானின் நலனை பாதுகாக்க வெளிநாடுகளில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்த புரட்சிப்படையின் தளபதி காசிம் சுலைமானி கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் உயிரிழந்தார். 

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் விமான நிலையம் அருகே சுலைமானி காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியது. இந்த சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு உள்ளதாக இஸ்ரேலும் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், காசிம் சுலைமானி கொல்லப்பட்டு இன்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ஈரானில் மக்கள் அனுசரித்து வருகின்றனர். சுலைமானின் நினைவு தினமான இன்று ஈரானை சேர்ந்த ஹேக்கர்கள் இஸ்ரேலின் பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் இணையதள பக்கத்தை முடக்கியுள்ளனர். 

‘ஜெருசலேம் போஸ்ட்’ என்ற பிரலப இஸ்ரேல் பத்திரிக்கை செய்தி நிறுவனத்தின் இணையதள பக்கம் முடக்கப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட அந்த இணையதள பக்கத்தில் ஒரு ஏவுகணை வருவதுபோல் புகைப்படம் இடம்பெற்று, நீங்கள் நினைப்பதை விட நாங்கள் உங்களுக்கு மிக அருகில் உள்ளோம்’ என எழுதப்பட்டுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட சில மணி நேரம் கழித்து ‘ஜெருசலேம் போஸ்ட்’ மீண்டும் இயல்பாக செயல்படத்தொடங்கியது.  

மேலும் செய்திகள்