ஏமன்: ஜெயில் மீது சவுதி கூட்டுப்படை வான்வெளி தாக்குதல் - 70 பேர் பலி

ஏமனில் அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்த ஜெயிலை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-01-22 07:34 GMT
Image Courtesy: AFP
சனா,

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடக்கம். இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அண்டொக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 17-ம் தேதி டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஏமனின் சனா என்ற நகரில் உள்ள ஒரு சிறைச்சாலை அகதிகள் முகாமாக செயல்பட்டு வருகிறது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறைச்சாலையை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அகதிகள் உள்பட 70 பேர் உயிரிழந்தனர். மேலும், 138 பேர் படுகாயமடைந்தனர்.

அதேபோல், அந்நாட்டின் ஹொடிடா என்ற நகரில் உள்ள தொலைதொடர்பு மையத்தை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தொலைதொடர்பு மையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்