இலங்கைக்கு இந்தியா ரூ.3,737 கோடி கடன் வழங்க ஒப்பந்தம் கையெழுத்து

இலங்கைக்கு இந்தியா ரூ.3,737 கோடி கடன் வழங்க ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

Update: 2022-02-02 19:49 GMT
கொழும்பு,

பொருளாதார பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறையால் இலங்கை திண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டுக்கு இந்தியா கைகொடுத்து வருகிறது.

இலங்கைக்கு அவசரகால உதவியாக ரூ.3 ஆயிரத்து 737 கோடி கடன் வழங்க முன்வருவதாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஜி.எல்.பீரிசுக்கு மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கடந்த மாதம் எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் அதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன் மூலம், எந்த ஒரு இந்திய வினியோகஸ்தர் மூலமும் எரிபொருளை இலங்கை இறக்குமதி செய்ய முடியும் என அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா தற்போது வழங்கும் கடன், அந்நாட்டின் அன்னியச் செலாவணி நெருக்கடியை ஓரளவு தணிக்கும் என்று கருதப்படுகிறது.

இலங்கையின் அன்னியச் செலாவணி இருப்பை மேம்படுத்தும் விதமாக, பண பரிமாற்ற திட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 990 கோடி வழங்கவும் இந்தியா கடந்த வாரம் ஒப்புதல் தெரிவித்தது.

இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து தலா 40 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை வாங்க இலங்கை நேற்று முன்தினம் முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்