சிறப்பு ரயில்கள் மூலம் இந்தியர்கள் மேற்கு பகுதிகளுக்கு செல்லலாம்- இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

தலைநகர் கீவ்-வில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் சிறப்பு ரயில்கள் மூலம் இந்தியர்கள் மேற்கு பகுதிகளுக்கு செல்லலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-28 07:31 GMT
 உக்ரைன்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷியா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.  

இதனிடையே தலைநகர் கீவ்வில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ராணுவத்திற்கு உக்ரைன் அரசு அறிவுறுத்தி உள்ளது.   

5 சிறப்பு விமானங்கள் உக்ரைனில் இருந்து டெல்லி வந்தடைந்துள்ள.இதுவரை உக்ரைனில் இருந்து1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். 

இந்நிலையில், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் ஹங்கேரி தலைநகர் பூடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 6-வது சிறப்பு விமானம் இன்று டெல்லிக்கு புறப்பட்டுள்ளது. 

இருப்பினும் மேலும் பல இந்தியர்கள் தற்போது உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் அங்கிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் இந்தியர்கள் மேற்கு பகுதிகளுக்கு  செல்லலாம் என இந்திய தூதரகம்  தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உக்ரைனில் சிக்கிதவிக்கும் இந்திய மாணவர்கள் சிலர்  பேருந்து மூலம் போலந்து நாட்டிற்கு பயணம் செய்துள்ள நிலையில் இந்திய தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்