இந்தியா உள்ளிட்ட நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும் - உக்ரைன் அரசு நம்பிக்கை

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும் என உக்ரைன் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Update: 2022-03-06 05:53 GMT
Image Courtesy: THE Sun

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷியா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

10 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு ஓட்டம் பிடித்துள்ள பரிதாப நிலையில், இன்னும் 40 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று ஐரோப்பிய யூனியன் கணித்துள்ளது.

ரஷிய படையினரின் தொடர் ஏவுகணைகள் வீச்சு, குண்டுமழை, பீரங்கி தாக்குதல், சரமாரி துப்பாக்கிச்சூடு என்று உக்ரைன் உருக்குலைந்து வருகிறது. பெரிய நகரங்களில் கெர்சன் நகரை மட்டுமே பிடித்துள்ள நிலையில் மற்ற நகரங்களையும் பிடிக்க தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. உக்ரைன் நாட்டில்தான் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் என்று சொல்லப்படுகிற ஜபோரிஜியா அணுமின்நிலையத்தையும் நேற்று ரஷிய படைகள் கைப்பற்றின. 

இதையடுத்து மீட்பு பணிக்காகவும், மனிதாபிமான அடிப்படையிலும் உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா நேற்று அறிவித்திருந்தது.

ஆனால், இந்த போர் நிறுத்தம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. உக்ரைன் மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கிவிட்டது என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அதன்படி 11 ஆவது நாளாக இன்றும் ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில்,  இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும் என உக்ரைன் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி டிமித்ரோ குலேபா  தொலைகாட்சியில் உரையாற்றியதாவது:-

" உக்ரைன் நாட்டில் ஆசியா , ஆப்ரிக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வர பெரும் உதவியாக இருந்துள்ளோம். வெளி நாட்டு மாணவர்களை நாங்கள் பத்திரமாக வெளியேற்ற சிறப்பான முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இன்னும் பத்திரமாக மீட்க ரஷியா தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.

தற்போது போரில் வெற்றி பெற்றதாக காட்டி கொள்ள ரஷியா முயற்சிக்கிறது. நாங்கள் எங்கள் மண்ணை காப்பாற்ற போராடுகிறோம். இந்தியா, சீனா , நைஜீரியா நாடுகள் ரஷ்யாவிடம் தாக்குதலை நிறுத்த கேட்க வேண்டும். தற்போதைய போரை யாரும் விரும்பவில்லை என ரஷிய அதிபர் புதினிடம் பேச வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்