உக்ரைன் போர்: ரஷிய அதிபருக்கு எதிராக இஸ்ரேல் தலைநகரில் போராட்டம்

ரஷிய அதிபர் புதினுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தலைநகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-13 10:15 GMT
டெல் அவிவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் தலைநகரை சுற்றிவளைப்பதில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. மறுபுறம் உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த போரில் இரு தரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரினால் இதுவரை 25 லட்சம் மக்கள் அகதிகளாகி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாக்கியா ஆகியவற்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து 18-வது நாளாக இன்று போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. 

இதற்கிடையில் ரஷியாவின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ஐ.நா. சபை, நேட்டோ கூட்டமைப்பு மற்றும் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷியா மீது சர்வதேச நாடுகள் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதுவும் வெற்றி பெறாத நிலையில், தற்போது வரை போர் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டின் தலைநகரில் ரஷிய அதிபர் புதினுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல் அவிவ் நகரில் உள்ள அஸ்ரேலி ஜங்ஷன் பகுதியில் சுமார் 400 இஸ்ரேலியர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ரஷிய அதிபருக்கு கண்டனம் தெரிவித்தும், போரை உடனே நிறுத்துமாறும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அதே போல் இஸ்ரேல் உள்துறை மந்திரி அயலெட் சாகேத் வீட்டின் முன்பு குவிந்த போராட்டக்காரர்கள், உக்ரைன் நாட்டில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்பதாக தெரிவித்தனர். மேலும் உகரைனில் இருந்து வரும் மக்களுக்கு அடைக்கலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும் செய்திகள்