உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல்: அமெரிக்க அதிபர் போலாந்து பயணம்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலாந்துக்கு செல்கிறார்.;

Update:2022-03-21 08:33 IST
Image Courtesy: AFP
வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. 

இதனால், உக்ரைன் - ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இதற்கிடையில், ரஷியாவின் தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். குறிப்பாக, உக்ரைனின் அண்டை நாடான போலாந்தில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

போலாந்து நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தி வருவதும் அந்நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போலாந்து பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) போலாந்து நாட்டிற்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது போலாந்து அதிபர் ஆண்ட்ரிச் டூடாவை ஜோ பைடன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் மற்றும் போலாந்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற விவகாரங்களுக்கு மத்தியில் போலாந்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.   

மேலும் செய்திகள்