ஹிட்லரிடம் இருந்து தப்பித்து புதினால் கொல்லப்பட்ட நபர்...!

நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பிய நபர் ரஷிய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.;

Update:2022-03-22 08:16 IST
கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பிய 96 வயது முதியவர் ரஷிய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்  போரிஸ் ரோமன்சென்கோ. இவருக்கு வயது 96. இவர் உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ரஷிய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் இவர் உயிரிழந்தார்.

இது குறித்து உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :

96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ்-டோரா, பெர்கன்-பெல்சன் ஆகிய நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பியவர். 

அவர் இறப்பதற்கு முன் வரை கார்கீவில் தனது அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால் கடந்த வெள்ளி கிழமை அன்று ரஷிய ராணுவத்தின் வெடிகுண்டு இவரது வீட்டில் விழுந்து இவர் உயிரிழந்தார். 

ஹிட்லரிடம் இருந்து  உயிர் பிழைத்த இவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்