இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா..!!

இலங்கை அரசின் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சரான நமல் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Update: 2022-04-03 19:21 GMT
கோப்புப்படம்
கொழும்பு, 

இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கும் போடப்பட்டதால் கொழும்பு வீதிகளில் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. தேசிய அரசு அமைக்க அதிபருக்கு நெருக்கடி வலுக்கிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெறும் சம்பவங்களால் இலங்கையில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே, தனது சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், அதற்கான கடிதத்தை கோத்தபய ராஜபக்சேவிடம் வழங்கியதாகவும் தகவல்கள் பரவின. மகிந்தவின் ராஜினாமா கடிதத்தை கோத்தபய ஏற்க மறுத்துவிட்டதாக மற்றொரு தகவலும் உலா வந்தது.

ஆனால் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என்றும், தற்போது அப்படி எந்த திட்டமும் இல்லை என்றும் இலங்கை பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மகனும், இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சருமான நமல் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அனைத்து இலாகாக்களில் இருந்தும் எனது ராஜினாமாவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிபரின் செயலாளருக்கு தெரிவித்துவிட்டேன். இது மக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட பிரதமரின் முடிவுகளுக்கு இது உதவக்கூடும் என்று நம்புகிறேன். எனது வாக்காளர்கள், எனது கட்சி மற்றும் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு நான் உறுதுணையாக இருப்பேன்” என்று நமல் ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

நள்ளிரவு வரை நீடித்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்