"இந்தியாவிடம் கூடுதல் கடனுதவி கோர உள்ளோம்" - இலங்கை நிதி மந்திரி தகவல்

இந்தியாவிடம் கூடுதல் கடனுதவி கோர உள்ளதாக இலங்கை நிதி மந்திரி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-10 10:25 GMT
கோப்புப் படம்
கொழும்பு,

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வந்தாலும் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.

மேலும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை. அங்கு நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.

ஆனால் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மக்கள் தினமும் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது.

இந்தியா அளித்த கடன் வேகமாக தீர்ந்து வருவதால் இலங்கையில் இம்மாத இறுதியில் டீசல் இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் டாலர் கடனுதவி கோர உள்ளதாக அந்நாட்டு நிதி மந்திரி அலி சப்ரி கூறியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இலங்கையில் அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாக கூறினார். நிதிநிலையை சரிசெய்வதற்காக அடுத்த வரி விகிதங்களை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்