44 பில்லியன் டாலர்களுக்கு எலான் மஸ்க்கிற்கு டுவிட்டர் நிறுவனம் விற்பனை..!!

எலான் மஸ்க்கிற்கு 44 பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ததை டுவிட்டர் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Update: 2022-04-25 20:58 GMT
வாஷிங்டன்,

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முயன்று வந்தார். இதன்படி அவர் டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்தார். 

மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்தார். முன்னதாக, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை  வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில்,  எலான் மஸ்கின் ஆஃபரை டுவிட்டர் நிர்வாகம் ஏற்றதாக தகவல் வெளியாகி இருந்தது. இதன்படி பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்க டாலர் என்ற கணக்கில் வழங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.  இந்த வாரத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க்கிடம் விற்பனை செய்ய டுவிட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் நிர்வாகக் குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் தற்போது வெளியாகவில்லை. டுவிட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் தற்போது வழிநடத்தி வருகிறார்.

இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு இருப்பதால், 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடன் இதற்கு முன்பு வரை எலெக்ட்ரிக் வாகன தொழிலதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவன அதிபராக மட்டுமே அறியப்பட்டு வந்த எலான் மஸ்க், தனது நிறுவனங்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்