கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகை உயிர்பிழைப்பது கடினம்! குடும்பத்தினர் தகவல்

கார் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-08-12 09:17 GMT

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த மினி கூப்பர் கார் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கொடூர விபத்து கடந்த வாரம் நடந்தது.

பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச்(53 வயது). இவர் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ, கேட் பைட், தி லாஸ்ட் வேர்ல்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். 'அனதர் வேர்ல்ட்' என்ற அமெரிக்க டிவி தொடரில் இரண்டு கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் தனது மினி கூப்பர் காரில், லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்து விலகிய கார், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் முன்பகுதியும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

தகவலறிந்து விரைந்து வந்த 60க்கும் மேற்பட்டத் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் நடிகை அன்னே ஹெச் படுகாயமடைந்தார். அவருடைய முதுகு பகுதியில் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவருக்கு மூளையில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து அதிவேகம் காரணமாக ஏற்பட்டதாகவும் அவர் மது அருந்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், போலீசார் இதை உறுதிப்படுத்தவில்லை. வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல நடிகை கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் பிழைப்பது கடினம் என்ற தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்