ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 255 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 130 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-06-22 06:41 GMT

காபூல்,

ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அங்கு கிட்டத்தட்ட 130 பேர் கொல்லப்பட்டதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மீட்புப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை பக்டிகா மாகாணத்தில் பதிவாகி உள்ளன. நிலநடுக்கம் காரணமாக அங்கு இதுவரை 255 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பக்டிகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் நூற்றுக்கணக்கான நாட்டு மக்கள் கொல்லப்பட்டனர் என்றும், பலர் காயமடைந்தனர் என்றும், நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் முற்றிலும் அழித்ததாகவும் தலீபான் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் பேரழிவு நிகழ்ந்த அந்த மாகாணங்களுக்கு அனைத்து உதவி நிறுவனங்களையும் உடனடியாக அனுப்ப குழுக்களை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்ததாக அண்டை நாடான பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பிற இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

பூகம்பத்தின் அதிர்வுகளை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா முழுவதும் 500 கிமீ (310 மைல்) தொலைவில் உணர்ந்ததாக ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்