சீன தலைநகரில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம்

சீன தலைநகர் பீஜிங்கில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-11 21:42 GMT

கோப்புப்படம்

பீஜிங்,

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்தது. நாட்டில் வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இல்லாத அளவுக்கு தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பதிவாகி வந்தது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பீஜிங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர்தான் தளர்த்தப்பட்டன.

இந்த நிலையில் பீஜிங்கில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பீஜிங்கில் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் இரவுநேர கேளிக்கைகள், 'ஷாப்பிங்' உள்ளிட்டவற்றுக்கு பெயர்பெற்ற சாயோயாங் மாவட்டத்தில் தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக அங்குள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்று கொரோனா பரவலின் மையமாக உருவெடுத்துள்ளதாகவும், அந்த மதுபான விடுதிக்கு சென்ற பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனிடையே சீனாவின் வர்த்தக தலைநகரமாக கருதப்படும் ஷாங்காயில் ஒரு அழகு நிலையம் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, அங்கு மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்