சூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற மால்டா கப்பல்: பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எகிப்தின் சூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற மால்டா நாட்டு கப்பலால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-05 08:17 GMT

கெய்ரோ,

எகிப்து நாட்டில் அமைந்துள்ள சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கிறது. இது மனிதனால் வெட்டப்பட்ட மிகப்பெரிய செயற்கையான கால்வாய் ஆகும். 193 கிலோ மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் உடைய இந்த கால்வாய் 1869-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

தற்போது ஐரோப்பாவுக்கும், ஆசிய நாடுகளுக்கும் இடையே பிரபல வர்த்தக பாதையாக இது திகழ்கிறது. மேலும் நாட்டின் அன்னிய செலாவணிக்கு முக்கிய ஆதாரமாகவும் இந்த கால்வாய் உள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டில் மட்டும் 23 ஆயிரம் கப்பல்கள் இதன் வழியாக சென்று வந்ததாகவும், அதன் மூலம் சுமார் ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியதாகவும் சூயஸ் கால்வாய் ஆணையம் கூறியது.

பொருளாதாரத்தில் தாக்கம்

இந்த பாதை வழியாகத்தான் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. உலக வர்த்தகத்தில் 10 சதவீதம் இதன் வழியாகவே நடைபெறுகிறது. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அது உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாயில் கடந்த மாதம் ஹாங்காங் நாட்டு கப்பல் ஒன்று தரைதட்டி நின்றது. இதனால் பல மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

8 கப்பல்கள் பாதிப்பு

இந்தநிலையில் மால்டா நாட்டுக்கு சொந்தமான சீவிகார் என்ற கப்பல் ஒன்று நேற்று கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு சென்றது. கால்வாயின் ஒற்றைப்பாதை வழியாக சென்றபோது திடீரென கப்பலின் எண்ணெய் டேங்கர் உடைந்து பழுது ஏற்பட்டது. எனவே பின்னால் வந்திருந்த 8 கப்பல்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து 3 இழுவை படகுகள் அங்கு அனுப்பப்பட்டு அந்த கப்பலை இழுத்து கொண்டு வந்தனர். பின்னர் கப்பல் பழுது சரிசெய்யப்பட்டு அங்கிருந்து சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஜார்ஜ் சப்வத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்