சீனாவில் ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் பலி
சீனாவில் ‘பெல் 505’ ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீஜிங்,
சீன நாட்டில் நேற்று முன்தினம் தலைநகரான பீஜிங்கின் புறநகர்ப்பகுதியில் சிவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. நேற்றுமுன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணி அளவில் நடந்த இந்த 'பெல் 505' ரக ஹெலிகாப்டர் விபத்தில் அதன் 2 விமானிகளும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டர், பீஜிங் ரெய்ன்வுட் ஸ்டார் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது. விபத்தில் ஹெலிகாப்டர் மிகவும் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பலியான விமானிகள் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து அறிய சீன அதிகாரிகள், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளனர்.