சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை; டிரம்ப் சூளுரை
எங்கள் மீதும், சிரியா மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடுத்த தாக்குதல் இது என டிரம்ப் வெள்ளை மாளிகையில் கூறினார்.;
வாஷிங்டன் டி.சி.,
சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் அமெரிக்க உரைபெயர்ப்பாளர் ஒருவர் என 3 பேர் பலியானார்கள். 3 வீரர்கள் காயமடைந்தனர்.
இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, எங்கள் மீதும், சிரியா மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடுத்த தாக்குதல் இது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றோம். அவர்களுக்காகவும், அவர்களின் பெற்றோர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நாங்கள் வேண்டி கொள்கிறோம் என கூறினார்.
இதற்கு நாங்கள் பதிலடி தருவோம் என டிரம்ப் சூளுரைத்து உள்ளார். காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய தனிநபர் ஒருவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டு விட்டார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷரா, வெள்ளை மாளிகையில் சில வாரங்களுக்கு முன் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.