பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது: ஐ.நா.வுக்கான இந்திய தூதர்

உலகின் ஒரு பகுதியிலுள்ள பயங்கரவாதம் உலகம் முழுமைக்கும் அமைதி, பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என்பதே எங்களது முடிவு என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பேசியுள்ளார்.

Update: 2022-08-10 01:40 GMT



நியூயார்க்,



சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது அதில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உலகளவில் அதிகரித்து காணப்படுகிறது.

உலகின் ஏதோ ஒரு பகுதியிலுள்ள பயங்கரவாதம், உலகம் முழுமைக்கும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக உள்ளது என்பதே எங்களது பரிசீலனையின் முடிவு ஆகும்.

அதனால், உலகளாவிய இந்த சவாலுக்கான எங்களது மறுமொழியானது ஒன்றிணைந்த, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பேசியுள்ளார்.

ஆப்பிரிக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் விரிவாக்கம், சர்வதேச சமூகத்தின் முழு கவனம் பெற தகுதி வாய்ந்தது. இதனை தனிப்பட்ட அச்சுறுத்தலாக பார்க்காமல், உலகின் பிற பகுதிகளுக்கும் கூட பரவ கூடிய ஆற்றல் வாய்ந்தது என்று பார்க்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலின் 20-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கூட, இந்திய வெளிவிவகார மந்திரி, கூட்டாக பயங்கரவாதங்களை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை தொடர்ச்சியாக வழங்கினார். அதனை நீங்கள் நினைவுகூரலாம் என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்