கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு- வெளியேற முடியாமல் சிக்கிய 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள்
80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அடுத்த சில தினங்களுக்கு அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.;
Image Courtesy : AFP
பெய்ஜிங்,
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்தது. தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகு தொற்று பரவல் வேகம் குறைந்தாலும் தற்போது சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது.
இதனால் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 'சீனாவின் ஹவாய்' என்று அழைக்கப்படும் சன்யா என்ற பிரபல சுற்றுலத் தளம் உள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள தீவு பகுதியான இங்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் அங்கு தற்போது உள்ள 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் அடுத்த 7 நாட்களுக்குள் ஐந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அந்த சுற்றுலா பகுதியில் உள்ள 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அடுத்த சில தினங்களுக்கு அங்கு இருந்து வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.