200 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை - உலக சுகாதார மையத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் வாழ்த்து..!

இந்தியாவில் 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதற்கு பூனம் கேத்ரபால் சிங், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-17 10:49 GMT

ஜெனிவா,

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் பல்வேறு அலைகளால் கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. சர்வதேச அளவில் 56 கோடிக்கும் கூடுதலானோர் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவை தடுக்க மற்றும் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் மத்திய அரசு இலவச அடிப்படையில் வழங்கி வருகிறது.

இந்த சூழலில், நாடு முழுவதும் இதுவரை 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி இந்தியாவில் 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தியாவில் 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார மையத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தியுள்ள இந்தியாவுக்கு வாழ்த்துகள். கொரோனா தொற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கான நாட்டின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளுக்கு இது மற்றொரு சான்றாகும்" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்