நித்திய வைகுண்டம்

திருப்பத்தூர் அருகில் இருக்கும் திருக்கோட்டியூர், 108 வைணவ தலங்களுள் ஒன்று. எல்லாப் பெருமாள் கோவிலிலும் அமைந்திருக்கும் வைகுண்ட கதவு என்ற பரமபதமாகிய சொர்க்கவாசல் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும். அன்றைய தினம் மட்டும் அதன் வழியாக பக்தர்கள் சென்று

Update: 2017-01-03 03:00 GMT
திருப்பத்தூர் அருகில் இருக்கும் திருக்கோட்டியூர், 108 வைணவ தலங்களுள் ஒன்று. எல்லாப் பெருமாள் கோவிலிலும் அமைந்திருக்கும்  வைகுண்ட கதவு என்ற பரமபதமாகிய சொர்க்கவாசல் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும். அன்றைய தினம் மட்டும்  அதன் வழியாக பக்தர்கள் சென்று தரிசிப்பார்கள். ஆனால், திருக்கோட்டியூரில் இந்த வைகுண்ட பரமபத அமைப்பு வழியே தினசரி சென்று  தரிசிக்கலாம். இப்படி நித்திய வைகுண்டம் இந்தத் திருக்கோட்டியூரில் மட்டுமே இருக் கிறது.

பெருமாளுக்கு  சிவாகம பூஜை

பெருமாள் கோவில்களில் பாஞ்சராத்ரம், வைகாசம் என வைணவ ஆகமங்களின்படி பூஜைகள் நடைபெறும். ஆனால் காஞ்சீபுரத்தில் உள்ள நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோவிலில், சிவாகமப்படி பூஜைகள் நடக்கின்றன. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோவில், பாடல் பெற்ற சிவதலங்களுள் ஒன்றான ஏகாம்பரேஸ்வரரின் கோவிலுக்குள் இருக்கிறது.

எனவே சிவபூஜை செய்பவர்களே, இங்கே பெருமாளுக்கும் பூஜை செய்கின்றனர். பெருமாளின் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமித் தாயார் இங்கு அவரது நாபியில் இருப்பதாக ஐதீகம். எனவே இவளுக்குச் சன்னிதி கிடையாது. உருவமின்றி இருப்பதால் ‘நேர் உருவில்லா தாய்’ என்று அழைக்கிறார்கள்.

பரதனை காப்பாற்றிய ஆஞ்சநேயர்

14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து வராவிட்டால் அன்றைய தினமே தீக்குளித்து இறப்பேன் என்று ராமரிடம், அவரது பாசமிகு தம்பி பரதன் கூறியிருந்தான். வனவாசம் முடிந்து விட்டது. ஆனால் கிளம்ப சற்று தாமதம் ஏற்பட்டது. தம்பியின் சத்தியம் தவறாமை தெரிந்ததால், அனுமனை அழைத்தார் ராமர். ‘எனக்கு முன்பாக விரைந்து சென்று பரதனிடம், அண்ணன் வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்’ என்று கூறி அனுப்பினார். அதன்படி காற்றை விட வேகமாக கிளம்பிச் சென்றார் அனுமன். அப்போது அண்ணன் வர தாமதமானதால் தீ வளர்த்து அதில் இறங்குவதற்காக மூன்று முறை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தான் பரதன். அவனது அண்ணன் பாசத்தை எண்ணி மகிழ்ந்த அனுமன், ராமர் கூறியதை எடுத்துரைத்து அவனை  காப்பாற்றினார்.

உக்கிர நரசிம்மர்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் பாதையில் உள்ள சிங்கிரி கோவில் எனும் ஊரில் உக்கிர நரசிம்மர் மூலவராகவே உள்ளார். பொதுவாக யோக நரசிம்மரைத் தான் மூலவராக அமைப்பது வழக்கம். இங்கு வீற்றிருக்கும் இப்பெருமாளின் முகத்தில் அமைதி தவழ்கிறது. உக்கிர நரசிம்மரை மூலவராகக் கொண்ட கோவில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாக அரங்கநாதர்

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டைஒன்றியம் செஞ்சேரிமலை அருகே உள்ள மலையபாளையத்தில் சுந்தரராஜ பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த திருத்தலத்தை சின்னமலைக் கோவில் என்றும் அழைப்பார்கள். ஆலயத்தின் மேற்கு பகுதிக்கு பின்புறம் மலைக்கு செல்ல வழி உள்ளது. அதன் வழியே பின்புற மலைகளுக்கு சென்றால் சுமார் 200 அடிக்கும் மேல் உள்ள பிரமாண்ட பாறையில் தலைகீழாக சயன கோலத்தில் அரங்கநாதர் பள்ளி கொண்டிருப்பது போல் திருவுருவம் காணப்படுகிறது. சுயம்புவாக அரங்கநாதர் தோன்றியதாக கூறுகின்றனர். இந்த அரங்கநாத சுவாமிக்கு தினமும் கோவில் அர்ச்சகர் பூஜை செய்து வருகிறார். பக்தர்கள் இங்கு செல்ல அனுமதி இல்லை.

மேலும் செய்திகள்