சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம் நடந்தது.

Update: 2017-01-15 23:30 GMT

சபரிமலை

நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழக்கமாக நடைபெறும் மாத பூஜைகள் தவிர, ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. கார்த்திகை மாதம் முதல் நாள் முதல், மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இந்த நாட்களில் கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து ஆண்டு தோறும் அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

மகர விளக்கு பூஜை

நடப்பு மண்டல பூஜை கடந்த டிசம்பர் 26–ந்தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30–ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வழிபட்டு வந்தனர்.

மகர விளக்கு பூஜையையொட்டி, தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உ‌ஷ பூஜை, உச்சபூஜை, மாலை நேர தீபாராதனை, அத்தாள பூஜை மற்றும் களபாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள்–வழிபாடுகள் நடைபெற்று வந்தது.

மகர ஜோதி தரிசனம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. முன்னதாக, மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் மாலை 4.30 மணிக்கு பம்பை கணபதி கோவிலுக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து, 5.30 மணிக்கு சரம்குத்தி பகுதிக்கு வந்தடைந்த திருவாபரண ஊர்வலத்திற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருவாபரணங்களை பெற்றுக்கொண்ட தேவசம் போர்டு அதிகாரிகள், நெற்றிப்பட்டம் சூடிய யானை முன் செல்ல மேள தாளம் முழங்க பக்தி பரவசத்துடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

வலிய நடைப்பந்தல் வழியாக கொண்டு செல்லப்பட்ட திருவாபரண பெட்டகங்களை 18–ம் படிக்கு கீழ் பகுதியில், கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல் சாந்தி உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொண்டு, திருவாபரண பெட்டகங்களை கோவில் கருவறைக்குள் கொண்டு சென்று சரியாக மாலை 6.30 மணிக்கு திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மகர விளக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவான அய்யப்பன் பக்தர்களுக்கு 3 முறை காட்சி அருளினார். ஜோதியை பார்த்ததும், சன்னிதானம், பம்பை சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகள், பத்தனம் திட்டை மாவட்டத்தின் ஆங்க முழி, அட்டைத்தோடு, பஞ்சிப்பாறை, இடுக்கி மாவட்டத்தின் புல் மேடு பாஞ்சாலிமேடு மற்றும் பருந்தும் பாறை பகுதிகளில் முகாமிட்டு காத்திருந்த லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் ‘‘சாமியே சரணம் அய்யப்பா’’ என கோ‌ஷம் முழங்கி அய்யப்ப பகவானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

20–ந்தேதி நடை அடைப்பு

மகர விளக்கை முன்னிட்டு கேரள தேவசம்போர்டு துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம்போர்டு தலைவர் பிரையார் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் தேவசம் போர்டு கமி‌ஷனர், போலீஸ் சிறப்பு அதிகாரிகள், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் சன்னிதானத்தில் முகாமிட்டு இருந்தனர்.

ஜனவரி 20–ந்தேதி காலையில், பந்தளம் மன்னர் குடும்பத்தின் சிறப்பு பிரதிநிதி சாமி தரிசனத்திற்கு பின் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்படும். முன்னதாக, அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை இன்று முதல் 19–ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும். மாலையில் தீபாராதனைக்கு பின் இந்த படிபூஜை நடைபெறும். 18 படிகளிலும் பட்டுத்துணி விரிக்கப்பட்டு பூக்களின் அலங்காரத்துடன் படி பூஜை நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்