ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

திருவனந்தபுரம், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

Update: 2017-03-11 20:07 GMT

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

பொங்கல் வழிபாடு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் உள்ளது. உலகப்பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இந்த பொங்கல் திருவிழா கடந்த 3–ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நேற்று நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், கோவில் முற்றத்தில் உள்ள பிரதான அடுப்பில் தீ மூட்டப்பட்டு பொங்கல் வழிபாடு தொடங்கியது.

அப்போது அங்கு தயாராக இருந்த பெண்கள் தங்கள் அடுப்புகளில் தீ மூட்டி பொங்கலிட்டனர். வானில் பறந்த ஹெலிகாப்டர் பொங்கல் பானைகள் மீது பூக்களை தூவியது.

லட்சக்கணக்கான பெண்கள்

வழக்கம்போல் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் பக்தி பரவசத்துடன் பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டனர். 2 நாட்களுக்கு முன்னதாகவே கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் இடம் பிடித்து, ஆங்காங்கே செங்கற்கள் வைத்து அடுப்பு வைத்து புது மண்பானைகளில் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர்.

இந்த பொங்கல் வழிபாட்டில் கேரள கவர்னர் சதாசிவத்தின் மனைவி சரஸ்வதி, சினிமா நடிகைகள் சிப்பி, பிரியங்கா மற்றும் டெலிவி‌ஷன் நடிகைகள் உள்பட பலர் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர். பின்னர் பொங்கல் பானைகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் 300–க்கும் மேற்பட்ட பூசாரிகள் ஈடுபட்டனர். இதனையடுத்து பொங்கல் பானைகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பெண் பக்தர்கள் மற்றும் குடும்பத்தினர் சாரை–சாரையாக தங்கள் ஊர்களுக்கு திரும்பினர்.

மேலும் செய்திகள்