திசையும் வழிபாடும்

சூரியதிசை நடப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் கூடும் நாளில் சூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம்.

Update: 2017-04-13 08:43 GMT
சூரிய திசை நடப்பவர்கள்:- இந்த ஆலயம் சூரியனுக்குரிய பரிகார ஸ்தலமாகும். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் ஆடுதுறைக்கு அருகில் இந்தத் திருத்தலம் உள்ளது. சூரியனுக்கு எதிரில் குரு நிற்க, நவக்கிரக அனுக்கிரக ஸ்தலமாக இது விளங்குகிறது.

சந்திர திசை நடப்பவர்கள்:- திங்கட்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில் திங்களூர் சென்று வழிபட்டு வரலாம். இதுவும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. சந்திரன் பூஜித்து பேறு பெற்ற ஆலயம் இதுவாகும்.

செவ்வாய் திசை நடப்பவர்கள்:- செவ்வாய்க்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபட்டு வரலாம். இந்த ஆலயத்தில் வலம்புரி விநாயகர், செல்வ முத்துக்குமரன், வைத்தியநாதர், தையல்நாயகி, அங்காரகன் ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. செவ்வாய்க்குரிய பரிகார ஸ்தலம் இது. செவ்வாயின் கடுமை குறைய, இங்குள்ள அங்காரகனுக்கு பரிகாரம் செய்வார்கள்.

புதன் திசை நடப்பவர்கள்:-
புதன்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில் திருவெண்காடு சென்று வழிபட்டு வருவது நல்லது. இங்குள்ள பெரிய வாரணப்பிள்ளையார், அகோரமூர்த்தி, கொம்பில்லா நந்தி, சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாநாயகி, புதபகவான் ஆகியோரை வழிபட்டால், தடைகளில் இருந்து தப்பிக்கலாம். பிள்ளைச் செல்வம் வழங்கும் பிள்ளை இடுக்கியம்மன் சன்னிதி இந்த ஆலயத்தில்தான் உள்ளது.

குரு திசை நடப்பவர்கள்:- வியாழக்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில், ஆலங்குடிக்குச் சென்று வழிபட்டு வரலாம். கும்பகோணம் பக்கத்தில் உள்ள இந்தத் திருக்கோவில் அகஸ்திய முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகும். இங்குள்ள இறைவன், தேவர்களை ஆபத்தில் இருந்து காத்ததால் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்ற திருநாமமும் இறைவனுக்கு உண்டு.
சுக்ர திசை நடப்பவர்கள்:- வெள்ளிக்கிழமையும், தாரா பலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில், கஞ்சனூர் சென்று வழிபட்டு வருவது நல்லது. இங்குள்ள அக்னீஸ்வரர் வழிபாடு செய்வது சுக்ர பலத்தைக் கொடுக்கும். கும்பகோணம் அருகில் உள்ளது இந்த ஆலயம்.

சனி திசை நடப்பவர்கள்:- சனிக்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில், காரைக்கால் அருகிலுள்ள திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் தீர்த்தமாடி தர்ப்பாரண்யேஸ்வரர், ஞானாம்பிகை, காகவாகனத்தான் ஆகியோரை வழிபட்டு வரவேண்டும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறும் போது இங்கு சென்று வழிபட்டால் தடைகள் அகலும்.

ராகு- கேது திசை நடப்பவர்கள்:- இந்த இரண்டு கிரகங் களும் சுய பலம் அற்ற கிரகங்கள். இவர்களுக்கென்று தனி வீடு இல்லை. ஆனால் அவர் எந்தக் கிரகத்தில் வீட்டில் இருக்கிறார்களோ, அந்த கிரகத்திற்குரிய கிழமையில் தாராபலம் பெற்ற நட்சத்திரம் சேரும் நாளில் அந்தந்த கிரகங் களுக்குரிய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும். ராகுதிசை நடப்பவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள நாகநாதரை வழிபட்டு வரலாம். கேது திசை நடப்பவர்கள் பூம்புகாருக்கு அருகில் உள்ள கீழப்பெரும்பள்ளம் சென்று கொள் தானியம் தீபமேற்றி கேதுபகவானை வழிபட்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்