சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு.. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையின்போது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;

Update:2025-12-17 21:46 IST

தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனர்.

திருவண்ணாமலை பெரிய நந்திக்கு அபிஷேகம்

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 

வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் பிரதோஷ வழிபாடு வெகு விமரிரசையாக நடைபெற்றது. பக்தர்கள் கொண்டு வந்த பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவசத்துடன் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதை தொடர்ந்து உற்சவர் ஸ்ரீஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் உற்சவர் சிலையை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 

 கீழ்பென்னாத்தூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை

கீழ்பென்னாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், குங்குமம், இளநீர், விபூதி, சந்தனம், பால், தயிர், பன்னீர் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் செய்தனர். நந்தியம் பெருமான், சுந்தரேஸ்வர், மீனாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதேபோல் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் இராஜந்தாங்கல் கிராமத்தில் உள்ள இராஜமங்களாம்பிகை சமேத இராஜலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தியம் பெருமான் மற்றும் வேட்டவலம் தர்மவர்த்தனி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்