வாழ்வில் வெற்றி பெற.. அனுமனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
அனுமனின் திறமையான செயல்பாடுகள் காரணமாகவே ராமர், வாலியை வதம் செய்து, சுக்ரீவனிடம் ராஜ்யத்தை திருப்பிக் கொடுத்தார்.;
சர்வ வல்லமை படைத்த அனுமன், வீரத்திற்கு மட்டுமல்லாமல் தூய்மையான பக்தி, விசுவாசம், புத்திக் கூர்மை மற்றும் பணிவுக்கு உதாரணமாய் விளங்குகிறார். அனுமனை வழிபடுவோருக்கு அறிவு, பலம், தைரியம், நம்பிக்கை, வெற்றி, ஆற்றல் என எல்லாவற்றையும் தருவார் என்பது ஐதீகம். வாழ்க்கையில் வெற்றி பெற ஏராளமான விஷயங்களை அனுமனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
அசோக வனத்தில் சீதையை தேடிச் சென்ற அனுமனுக்கும், ராவணனின் மகன் இந்திரஜித்திற்கும் இடையே சண்டை நடந்தது. அப்போது அனுமனை அழிப்பதற்காக பிரம்மாஸ்திரத்தை ஆயுதமாக பயன்படுத்தினான் இந்திரஜித். அந்த சமயத்தில் தன்னுடைய பலத்தை பயன்படுத்தி பிரம்மாஸ்திரத்தை உடைத்து போட்டிருக்க அனுமனால் முடியும். இருந்தாலும், பிரம்மா அளித்த அந்த ஆயுதத்தை அவமதித்து விடக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால், பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு, இந்திரஜித்திடம் கைதானார் அனுமன்.
கடலுக்கு நடுவே கற்களால் பாலம் அமைத்துக் கொண்டிருந்தபோது வானர கூட்டத்தை சேர்ந்த பலரும் தொடர் பணியின் காரணமாக சோர்ந்து போனார்கள். இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்தி, எடுத்த பணியை முடிக்க வழி நடத்தினார் அனுமன். ராவண யுத்தத்தின்போது வானர சேனைகளை மிக சிறப்பாக வழிநடத்தி சென்றார். எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் தன்னுடைய நிதானத்தை இழக்காமல், அதிலும் நகைச்சுவை செய்வது அனுமனின் தனித்திறன்.
சீதையை தேடிச் சென்ற போது ராவணனின் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அனுமன் நேராக ராவணன் முன் நிறுத்தப்பட்டார். அவருக்கு அமருவதற்கு ராவண சபையில் இருக்கைகூட தரப்படவில்லை. ஆனாலும் அனுமன் கோபப்படவோ, அவமானப்பட்டதாகவோ எண்ணாமல் ராமன் அனுப்பிய சமாதான தகவலை ராவணனிடம் எடுத்துச் சொன்னார்.
ராமனும், சுக்ரீவனும் சந்தித்துக் கொண்டதில் அனுமனின் பங்கு மிக முக்கியமானது. அனுமனின் திறமையான செயல்பாடுகள் காரணமாகவே ராமன், வாலியை வதம் செய்து, சுக்ரீவனிடம் ராஜ்யத்தை திருப்பிக் கொடுத்தார். அனுமன் பலவிதமான சக்திகளை படைத்தவர். இந்திரஜித்துடனான போரில் லட்சுமணன் காயமடைந்து, மயக்க நிலைக்கு சென்றார். அப்போது லட்சுமணனின் உயிரை காக்க அனுமனிடம் சூரியன் மறைவதற்கு முன் சஞ்சீவி மூலிகை கொண்டு வரும்படி கேட்கப்பட்டது. இமயமலைக்கு சென்ற அனுமனுக்கு எது சஞ்ஜீவி மூலிகை என தெரியவில்லை. இருந்தாலும் கொஞ்சமும் யோசிக்காமல் சஞ்சீவி மலையையே இமயமலையில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்து விட்டார்.