ஆன்மிகம்
திருப்பதி தேவஸ்தான கோவிலில் அகோரிகள் தரிசனம் நடை சாத்தப்பட்டதால் திடீர் பரபரப்பு

சென்னை தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் அகோரிகள் நேற்று தரிசனம் செய்தனர். கோவில் நடை சாத்தப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,

சென்னை தியாகராயநகரில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். பெருமாளுக்கு விசேஷ நாளாக கருதப்படும் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அதன்படி சனிக்கிழமையான நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்தநிலையில் காசியை சேர்ந்த 2 அகோரிகள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர். அகோரிகள் தரிசனம் செய்யும் காட்சியை பக்தர் ஒருவர் செல்போனில் படம்பிடித்து அதனை வெளியில் பரவ விட்டார். இந்த தகவல் வாட்ஸ்-அப், பேஸ்-புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக வேகமாக பரவியது.இந்தநிலையில் கோவில் நடை திடீரென்று சாத்தப்பட்டது. திடீரென்று நடை சாத்தப்பட்டதால் பெருமாளை தரிசிக்க வந்த பக்தர்கள் மத்தியில் குழப்பமும், பரபரப்பும் காணப்பட்டது.

இதுகுறித்து கோவில் தரப்பில் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:- ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசியில் கோவிலில் பராமரிக்கப்படும் கணக்கு புத்தகங்கள் சுவாமிக்கு முன்பு வைத்து பூஜிக்கப்படும். இதற்காக ஆண்டு தோறும் ஆனி மாதம் இறுதியில் சில மணி நேரம் கோவில் நடை மூடப்படும். அதேபோன்று தான் தற்போது மூடப்பட்டு, பூஜைகள் முடிந்த உடன் பகல் 11.30 மணி அளவில் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்’ என்றனர்.