ஆன்மிகம்
நல்ல பண்புகளை போற்றுவோம்

காலித் பின் வலீத் (ரலி) அவர்களைக் குறித்தோ அவரின் வீரம் குறித்தோ அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். காலித் (ரலி) இஸ்லாத்தை ஏற்றால் நன்றாக இருக்குமே என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.
காலித் பின் வலீத் (ரலி) அவர்களைக் குறித்தோ அவரின் வீரம் குறித்தோ அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். காலித் (ரலி) இஸ்லாத்தை ஏற்றால் நன்றாக இருக்குமே என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

ஆயினும் அது எவ்வாறு நடக்கும்? அவர்தான் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்துப் போரிலும் முன்னணியில் நின்று போரிடுகின்றாரே. மட்டுமல்ல உஹது போரில் முஸ்லிம்களின் பின்னடைவுக்குக் காரணமே அவர்தானே.

இவ்வளவும் ஏன்? கஸ்ஃபான் என்ற இடத்தில் வைத்து பெருமானார் (ஸல்) அவர்களையே கொலை செய்யவும் முயன்றார் இந்த காலித் (ரலி). அந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பும் துவேஷமும் கொண்டிருந்தார்.

அவரைக் குறித்துதான் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அவர் மட்டும் நம்மிடம் வந்தால் ஏனையவர்களைவிட அவருக்கு நாம் அதிக சங்கை செய்வோம்”.

காலித் (ரலி) அவர்களைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்த நல்ல வார்த்தைகள் தான் அவரை இஸ்லாத்தின்பால் கொண்டுவந்தது.

ஆயினும் இது எப்போது நடந்தது? எங்கு வைத்து? எந்த சந்தர்ப்பத்தில் கூறியது? வாருங்கள் பார்க்கலாம்.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப்பின்னர் குறைஷிகளின் செல்வாக்கும் மதிப்பும் அரபுகளுக்கு மத்தியில் நாளுக்கு நாள் குறைந்து வருவதை காலித் உணரத் தொடங்கினார். ஆனால், என்ன செய்வது, எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்தார்.

முஹம்மதைப் பின்பற்றுவதா.. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதா.. அல்லது வேறு மதங்களை ஏற்றுக்கொள்வதா..? என்பது அவருக்கு புரியவில்லை.

இந்த நேரத்தில்தான் ‘உம்ரா’ செய்வதற்காக முஸ்லிம்கள் மக்காவுக்கு வருகை தந்தனர். இஹ்ராம் ஆடை அணிந்த நிலையில் மக்காவில் வலம் வரும் முஸ்லிம்களைக் கண்ணால் காணும் மனோதிடம் காலித் (ரலி) அவர்களுக்கு இருக்கவில்லை.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கி இருந்த நான்கு நாட்களும் மக்காவை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

நபி (ஸல்) அவர்களும் தமது ‘உம்ரா’வை முடித்தார்கள். மக்காவின் வீதிகளில் உலா வந்தார்கள். பழைய நினைவுகள் திரும்பின. அத்துடன் காலித் பின் வலீதின் நினைவும் வந்தது.

காலிதுடைய சகோதரர் வலீத் பின் வலீத் (ரலி), பெருமானாருக்கு அருகே நின்றுகொண்டிருந்தார். இவர் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்று நபிகளாருடன் உம்ரா செய்வதற்காக மக்காவுக்கு வந்திருந்தார்.

வலீத் பின் வலீத் (ரலி) அவர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: ‘காலித் எங்கே?’

பெருமானாரின் இந்தக் கேள்வி வலீத் (ரலி) அவர்களுக்கு வியப்பைத் தந்தது. தமக்குப் பெரும் துன்பங்களையும் துயரங்களையும் தந்த தனது சகோதரரைக் குறித்து நபிகளார் விசாரிக்கின்றார்கள். ஆயினும் அவர் ஓடிவிட்டார் என்று எவ்வாறு கூறுவது?.

ஆகவே, ‘அவர் வருவார்.. அல்லாஹ்வின் தூதரே!’ என்று மட்டும் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவரைப் போன்றவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் இருக்கலாமா? அவருடைய போர் திறமையும், கூர்மையான அறிவும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் பயனளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவருக்குத்தானே அது நன்மை. அவர் மட்டும் நம்மிடம் வந்தால் ஏனையவர்களைவிட அவருக்கு நாம் அதிக முன்னுரிமை கொடுப்போம்”.

காலித் குறித்த அண்ணலாரின் செய்தியை அவரது சகோதரர் வலீத் (ரலி) அவர்களிடம் சமர்ப்பித்தாயிற்று. இனி என்ன..? வலீத் (ரலி) தமது சகோதரரை மக்காவின் வீதிகளில் தேடத்தொடங்கினார். கிடைக்கவில்லை. அவர் அங்கு இருந்தால் அல்லவா கிடைப்பதற்கு..? ஆகவே சகோதரர் காலிதுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்:

“அல்லாஹ்வின் திருப்பெயரால்... இஸ்லாத்தைக் குறித்த உனது அறியாமை எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது காலித். உனது அறிவுத் திறமைபோல் யாருக்கும் வராது. உன்னைப் போன்றோர் இஸ்லாத்தைக் குறித்த அறியாமையில் இருக்கலாமா?. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘காலித் எங்கே?’ என்று உன்னைக் குறித்து விசாரித்தார்கள். ‘நிச்சயம் நீ வருவாய்’ என்று நான் கூறியுள்ளேன். அதற்கு, ‘அவர் மட்டும் நம்மிடம் வந்தால் ஏனையவர் களைவிட அவருக்கு நாம் அதிக முன்னுரிமை கொடுப்போம்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அருமைச் சகோதரரே..! தவறவிட்ட நன்மைகளைச் சம்பாதிப்பதற்கான காலம் கனிந்து நிற்கிறது. இனியும் தாமதம் வேண்டாம்”.

சகோதரர் எழுதிய கடிதம் காலிதின் (ரலி) கரங்களுக்குக் கிடைக்கிறது. மனம் மாறத் தொடங்கியது. பின்னர் நடந்தவற்றை காலித் (ரலி) அவர்களே கூறுகின்றார்கள்:

“என்னை வந்தடைந்த என் சகோதரரின் கடிதத்தைப் படித்தபோது, இஸ்லாத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதரே என்னை விசாரித்துள்ளார்கள் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது. மதீனாவுக்குச் செல்ல தீர்மானித்தேன். தீர்மானத்தைச் செயல்படுத்தினேன்”.

“மதீனா செல்லும் பாதையில் என்னுடன் உஸ்மான் பின் தல்ஹா (ரலி) மற்றும் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) ஆகியோரும் இணைந்து கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது சகோதரர் மூலம் எனது வருகையை முன்கூட்டியே அறிந்துகொண்டார்கள்”.

“மதீனாவின் எல்லையில் எனது சகோதரர் என்னை வரவேற்று, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உனது வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். நீ வருவது அவர் களுக்கு பெரும் மகிழ்ச்சி, வேகமாகச் செல்’ என்று கூறினார்”.

“தூரத்தில் இருந்தே என்னைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், புன்னகை செய்தவராக என்னை நோக்கி வந்தார்கள். சந்தித்தோம். முழு மனதுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உனக்கு நேர்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! நீ புத்திசாலி என்று எனக்குத் தெரியும். உனது புத்திசாலித்தனம் நன்மையின் பக்கம்தான் உன்னை அழைத்து வரும் என்றும் எனக்குத் தெரியும்’.

பின்னர் நடந்தவை அனைத்தும் வரலாறுதான். காலிதின் (ரலி) வீரதீரச் செயல்களை எல்லாம் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

ஆயினும், காலிதின் மனமாற்றத்திற்கான காரணம் என்ன..? தமக்கு எதிராக எவ்வளவுதான் எதிர்ப்பை காட்டியிருந்த போதிலும் அவரிடம் இருந்த நல்ல பண்புகளைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் முதலில் குறிப்பிட்டார்கள்.

ஒருவர் தவறான வழியில் சென்றாலும், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை போற்றி, பின்னர் அவரது தவறுகளை சுட்டிக்காட்டினால், அவர் தனது தவறுகளை உணர்ந்து திருந்தி நல்வழியில் நடக்க முன்வருவார். இந்த நிகழ்ச்சி கற்றுத்தரும் நமக்கான பாடமும் அதுதான்.

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.