தூத்துக்குடியில் நவராத்திரி விழா: அம்மன் சப்பரங்கள் ஊர்வலம்

நவராத்திரி விழாவையொட்டி தூத்துக்குடியிலுள்ள சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளியம்மன் உள்பட 9 அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்து வந்தன.

Update: 2017-10-02 23:40 GMT

தூத்துக்குடி,

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அனைத்து கோவில்களில் இருந்து அம்மன்கள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தூத்துக்குடி மாநகரம் முழுவதும் சப்பரங்களில் அம்மன்கள் வலம் வந்தன. இதில் தூத்துக்குடி தபசு மண்டபம், தெப்பகுளம் குமாரர் தெரு, அழகேசபுரம், மத்தியபாகம் காவல் நிலையம் முன்பு உள்ள சக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பகுதி அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் நேற்று இரவு ஊர்வலமாக சென்றன. ஊர்வலத்தின் முன்பு பெண்கள் மாவிளக்கு ஏந்தி சென்றனர். சப்பரங்கள் தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு ஒன்றன் பின் ஒன்றாக சென்றடைந்தன. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பட்டு சாத்தி எதிர்சேவை நடந்தது.

நிகழ்ச்சியில் சப்பர பவனி கமிட்டி தலைவர் லிங்கசெல்வன், அமைப்பாளர் எம்.பி.எஸ்.நம்பிராஜன், இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் ராகவேந்திரா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்