வைகுண்ட பதவி தரும் விரதம்

மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம்; தீர்த்தங்களில் சிறந்தது கங்கை. அதே போல் விரதங்களில் சிறப்பானதும், மகத்துவம் மிக்கதும் ஏகாதசி விரதமாகும்.

Update: 2017-12-26 08:16 GMT
29-12-2017 வைகுண்ட ஏகாதசி

ந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சுழற்சி முறையில் வரும் திதிகளில் ஒன்றுதான் ஏகாதசி. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து அடுத்து வரும் 11-வது திதியே ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் பதினொன்று என்பதற்கு ‘ஏகாதச’ என்று பொருளாகும். இந்த ஏகாதசி நாட்களில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியதாகும். ஆண்டிற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இவற்றில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று வழங்கப்படுகிறது.

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வந்தால், அவர் நமக்கு வைகுண்ட பதவி அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுமட்டுமின்றி, கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து மற்றும் மனம் ஆகிய பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் யாவும், பதினொன்றாவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முரன் என்னும் அசுரன், பல வரங்களைப் பெற்று, தேவர் களுக்கும், பக்தர்களுக்கும் துன்பங்களை அளித்து வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்து அருளும்படி, அனைவரும் சிவபெருமானைத் துதித்தனர். ஈசனோ, அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறினார். அதன்படி அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.

தேவர்களையும், மக்களையும் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, முரனுடன் போர் புரியத் தொடங்கினார். அவர்கள் இருவருக்குமான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இரு வரும் களைப்படைந்தனர். சற்றே ஓய்வு தேவை என்பதை அறிந்த இருவருமே ஓய்வெடுக்க முற்பட்டனர். அதன்படி மகாவிஷ்ணு, பத்ரிகாஸ்ரமம் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

ஆனால் நயவஞ்சகம் கொண்ட முரன், மகாவிஷ்ணு ஓய்வில் இருப்பதை தனக்கு சாதகமாக வைத்து அவரை கொல்லத் துணிந்தான். வாளை ஓங்கியபோது, மகாவிஷ்ணுவின் சரீரத்தில் இருந்து அவரது சக்தி ஒன்று பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த சக்தி, முரனை அழித்து சாம்பலாக்கியது.

கண் விழித்து எழுந்த நாராயணர், தன் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்திக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டு, அவளை திதிகளில் ஒருவராக இருக்க பணித்தார். மேலும் ஏகாதசி திருநாளில் தன்னையும், ஏகாதசியையும் போற்றி வழிபடுபவர்களுக்கு நான் சகல நன்மைகளையும் அருள்வேன் என்றும் வரம் அருளினார்.

எனவே அந்த சிறப்பு மிக்க நாளில் நாமும் கண் விழித்திருந்து, ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் பெருமாளின் பரிபூரண அருளைப் பெறலாம். 

ஏகாதசி விரத முறை

சிறப்பு மிகுந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் கண் விழித்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம். மேலும் 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். குளிர்ந்த நீர், வயிற்றை சுத்தமாக்குகிறது. துளசி இலை வெப்பம் தரக் கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும். முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள், நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும்.

மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை ‘பாரணை’ என்கிறார்கள். உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை போன்றவற்றைச் சேர்த்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். 

முக்கோடி ஏகாதசி

இலங்காபுரியை ஆட்சி செய்தவன், ராவணன். அவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் செய்து வந்த இன்னல்கள் ஏராளம். அவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத தேவர்கள் அனைவரும் பிரம்மாவுடன் இணைந்து, வைகுண்டம் சென்று, அங்கு பாம்பு பஞ்சணையில் இருந்த நாராயணனை வணங்கி, தங்கள் துன்பங்களை போக்கக் கூறினர். அப்படி அவர்கள் நாராயணரை வழிபட்ட தினம் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லப்படுகிறது. தன்னை வேண்டி நின்ற தேவர் களின் துன்பங்களைப் போக்கியதால், வைகுண்ட ஏகாதசிக்கு ‘முக்கோடி ஏகாதசி’ என்றும் பெயர் உண்டு. 

வைகுண்ட வாசம்

தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற் கடலை கடைந்தனர். அப்போது அமுதம் வெளிப்பட்ட தினம் ஏகாதசி என்று கூறப்படுகிறது. மறுநாள் துவாதசி திதியில் மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குக் காட்சி அளித்தார். எனவே ஏகாதசி அன்று இரவும் பகலும் விரதம் இருந்து, திருமாலை துதித்து விட்டு, துவாதசியில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு போன்றவற்றுடன், வைகுண்டவாசத்தையும் இறைவன் வழங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. 

கீதா ஜெயந்தி

அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தைக் காக்கும் பொருட்டு, மகாபாரதப் போர் உருவானது. அந்தப் போரில் கவுரவர்களை எதிர்த்துப் போர் புரிய பாண்டவர்கள் எதிர்வரிசையில் நின்று கொண்டிருந்தனர். குருசேத்திரத்தில் அனைவரும் நின்றிருக்க, அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்கும் தன் உறவுகளைப் பார்த்து கவலை கொண்டான். அவர்களை எதிர்த்து போர்புரிவதை விட போரை கைவிடுவது மேல் என்று எண்ணினான். அப்போதுதான் அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் ‘பகவத் கீதை’யை உபதேசம் செய்தார். அவர் கீதையை உபதேசம் செய்த தினம் ‘வைகுண்ட ஏகாதசி’ நாள் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த நாளை ‘கீதா ஜெயந்தி’ என்றும் அழைக்கிறார்கள். 

மேலும் செய்திகள்