துன்புறுத்துவோரை ஆசீர்வதிக்க சொல்வது ஏன்?

இறைவனுக்கு தெரிந்துதான் துன்பன் அனுமதிக்கப்படுகிறது என்றால், எந்த பின்னணியில் அது அனுமதிக்கப்படுகிறது? என்பதை அறிவது, ஞானத்தின் ஒரு அம்சமாகும்.

Update: 2017-12-28 23:45 GMT
லகத்தில் எல்லாருமே பலவகை துன்பங்களுக்கு ஆளாகியே கடந்து சென்று கொண்டிருக்கிறோம். பிறப்பு நிகழ்ந்து விட்டால் இறப்பும் அப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விடுவது போலத்தான், துன்பங்களை கடப்பதும் உறுதியாகிவிடுகிறது. 

துன்பத்தை ஏற்படுத்தியவனுக்கு பதிலுக்கு துன்பம் அளிக்கும் இயல்பான நிலை, மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்றளவுமாய் தொடர்கிறது. பதிலுக்கு துன்பம் அளிப்பதை நேரடியாக ஒருவனால் நிறைவேற்ற முடியவில்லை என்றால்கூட, புகார் கூறுதல், வழக்கு தொடர்தல், விசாரணைக்கு அழைத்தல் போன்ற சட்டஅங்கீகாரம் பெற்ற அம்சங்களை நாடுகிறான். 

சிலர் சட்டம் அங்கீகரிக்காத வேறு பல வழிகளை நாடி, துன்பம் அளித்தவருக்கு பதில் செய்கின்றனர். இந்த இரண்டில், ஒருவன் எந்த வழியை தேர்வு செய்திருந்தாலும் அவனுக்குள் இருக்கும் நோக்கம், ‘பதிலுக்கு துன்பம் அளித்தாக வேண்டும்’ என்பதுதான்.

பதிலுக்கு துன்புறுத்த முடியாத உயர்ந்த இடத்தில் இருப்பவனைக்கூட, துன்புறுத்துவது போல் மனதில் எழும் எண்ணங்களால் ஆட்கொள்ளப்படுகிறோம். ஆக மொத்தத்தில், எப்படியாவது பதிலுக்குப் பதில் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலைக்குள் எந்த மனிதனும் வராமல் தப்பியது கிடையாது. சிலர் காத்திருந்து பதிலுக்கு துன்பம் அளிப்பதையும் அறிந்திருக்கிறோம்.

உலக சட்டங்கள் ரீதியாக பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உலகம் ஏற்றுக்கொள்கிறது. ஆதாரங்களை நோக்கும் அந்த சட்டங்கள், குற்றச்சாட்டின் நோக்கத்தை சீர்தூக்கிப் பார்ப்பதில்லை. ஆனால் நியாயத்தைக் கூறுவதில், உலகச் சட்டங்களில் இருந்து கிறிஸ்தவம் வேறுபடுகிறது. பதில் நடவடிக்கையாக மற்றவருக்கு துன்பம் இழைக்க வேண்டும் என்று ஒருவனுக்கு உள்நோக்கம் இருந்தால் அது பாவம் என்று கிறிஸ்தவ மார்க்கம் தீர்ப்பளிக்கிறது. ஏனென்றால், துன்புறுத்துவோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று இந்த மார்க்கம் வலியுறுத்துகிறது.

துன்பம் பற்றி கிறிஸ்தவம் காட்டும் ஞானம் வேறு. ‘தலையில் இருந்து ஒரு முடி விழுவதும், ஒரு சிறு பறவை செத்து தரையில் விழுவதும் என்னை அறியாமல் நடக்காது’ என்று ஏற்கனவே மனித குலத்துக்கு இறைவன் உறுதியளித்துள்ளார் (மத்.10:29,30). 

அப்படி ஒவ்வொன்றையும் இறைவன் தனது எண்ணிக்கையில் வைத்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ஒருவனுக்கு இழப்பு, துன்பம் போன்றவை எப்படி இறைவன் அறியாமல் வரும்? இறைவனுக்கு தெரிந்துதான் துன்பன் அனுமதிக்கப்படுகிறது என்றால், எந்த பின்னணியில் அது அனுமதிக்கப்படுகிறது? என்பதை அறிவது, ஞானத்தின் ஒரு அம்சமாகும்.

இதில் ஒரு பின்னணி மட்டும் யோபுவின் வாழ்க்கையின் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. கி.மு. இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தன் யோபு. இறைவனின் கட்டளையின்படி நேர்மையாக வாழ்ந்து வந்த பக்தன் அவன். திடீரென்று ஒரு நாளில் அவனது அனைத்து மகன்கள் மற்றும் மகள்களும் வீடு இடிந்து விழுந்து இறந்து போனார்கள். சிறிது இடைவெளியில் அவனுக்கென்றிருந்த ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற சொத்துகள் கொள்ளையர்கள் மூலமாகவும் இயற்கை பேரிடர் மூலமாகவும் முற்றிலும் அழிந்து போயின.

அடுத்ததாக, ஒரு நிமிடம் கூட தூங்க முடியாத அளவுக்கு யோபுவுக்கு உடல் முழுவதும் கட்டிகள் உட்பட சொறி நோய்கள் வந்தன. கொஞ்சம் தூங்கிவிட்டால், அதில் மகாபயங்கர கனவுகள் வந்து பயமுறுத்தின. மனைவியின் அன்பும் குறைந்தது. உடல்வலி மற்றும் மனவேதனையினால் ஒரு சில நாட்களுக்குள் யோபு உருக்குலைந்து, நண்பர்களாலும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு சுருங்கிப்போனான். இந்த சம்பவத்தில் யோபுவுக்கும், அவனது நண்பர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல்தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவைப்படும் ஞானத்தை அள்ளித்தருகிறது.

இறைவன் அறியாமல் இந்த துன்பங்கள் தன்னை அண்டவில்லை என்பது யோபுவுக்கு நன்றாகத் தெரியும். அவற்றை இறைவன் கையினால் பெறும் தீமை என்று மனைவியிடமும், நண்பர்களிடமும் சொன்னான் (யோபு 9:24, 19:22). இந்த காலகட்டத்தில் யோபு எழுப்பிய சந்தேகத்தின் சுருக்கம் என்னவென்றால், ‘சின்னச்சின்ன மீறுதல்கள் என்னிடம் இருந்திருக்கலாம். அவற்றுக்கு ஏற்ப சிறுசிறு துன்பங்களைத்தானே பதிலுக்கு இறைவன் அனுமதிக்க வேண்டும்? ஆனால் இவ்வளவு மிகப் பெரிய இழப்பை சந்திக்கும் அளவுக்கு நான் பிறருக்கு என்ன செய்தேன்?’ என்பதுதான்.

துன்பங்கள் வருவதற்கான காரணங்கள் பற்றி யோபுவின் நண்பர்கள் கூறிய கருத்தில் தவறு இல்லை. ஆனால் யோபுவுக்கு ஏன் அப்படிப்பட்ட துன்பங்கள் வந்தன என்பதை அவர்கள் அறியாமல் பேசினர். இதை இறைவனும் கண்டித்தார். நண்பர் களுக்கு பதிலளித்த யோபு, ‘காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே’ என்றான் (யோபு 19:28).

அதாவது, ‘யார் மூலமாவது துன்பம் வந்துவிட்டால், அதைத் தந்தவருக்கு பதிலுக்கு துன்பம் விளைவித்துவிடக் கூடாது. ஏனென்றால், அந்த துன்பம் வந்ததற்கான உண்மையான மூலகாரணம் எது என்பதை நாம் அறியும்போது, பதிலுக்கு துன்பம் அளித்ததற்காக வருந்த வேண்டியதிருக் கும்’ என்ற கருத்தை யோபு வெளிப்படுத்துகிறான்.

அதாவது, ‘ஏதோ ஒரு காரணத்துக்காக நமக்கு இறைவனால் துன்பம் அனுமதிக்கப்படுகிறது. அதை அவர் படைத்த ஒரு மனிதன் மூலமாகவோ அல்லது காற்று, நீர், அக்னி போன்றவற்றின் மூலமாகவோ தருகிறார். துன்பத்தை இறைவன் அனுமதித்தது ஏன் என்பதற்கான மூலகாரணம் தெரியாத நிலையில், துன்புறுத்திய மனிதன் மீது கோபப்பட்டு பதிலுக்கு துன்பம் கொடுப்பது தவறு’ என்பதை யோபு கூறிய இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. 

இறைவன் அளித்த அனுமதியின் பேரில், யோபுவை துன்             புறுத்துவதற்கு கொள்ளையர்களை சாத்தான் பயன்படுத்திக் கொண்டான். பெருங்காற்று, அக்னி, நோய்க்கிருமிகள் ஆகியவற்றையும் இறைவனின் அனுமதியின் பேரில் சாத்தான் யோபுவுக்கு எதிராக உபயோகித்தான். 

ஆக, ஒரு பக்தனுக்கு துன்பம் வரும் வி‌ஷயத்தின் பின்னணியில் இறைவனின் அனுமதி இருப்பதால், அதற்காக பயன்படுத்தப்படும் மனிதர்களை (கொள்ளையன் என்றாலும்) பகைப்பது அஞ்ஞானம். எதற்காக துன்பம் அனுமதிக்கப்பட்டது என்பது ஒருவேளை உடனடியாக பக்தனுக்கு புரியாமல் இருக்கலாம். துன்புறுத்த பயன்படுத்தப்படுபவனுக்கும் அது தெரியாது. எனவேதான் யோபுவும் அது புரியாமல் புலம்பினான். இறைவன் மீது யோபு வைத்திருக்கும் விசுவாசத்துக்கான சோதனை அது. பிற்காலத்தில் யோபுவுக்கு அது தெரிந்திருக்கலாம்.

எனவே பக்தர்களுக்கு இதுபோன்ற ஏதோ ஒரு சோதனைக்காகவோ அல்லது  ஏற்கனவே முன்பு செய்திருந்த பாவத்தின் பின்விளைவுக்காகவோ துன்பங்கள் அனுமதிக்கப்படும்போது அது புரியாமல், துன்புறுத்துவோரை பதிலுக்கு நோகடிக்கும் வழிகளைத் தேடக் கூடாது. அதனால்தான் ‘துன்புறுத்துவோரையும் ஆசீர்வதியுங்கள்’ என்று இறைவன் கூறினார்.

மேலும் செய்திகள்