உங்கள் வேண்டுதல் கேட்கப்பட்டது

சாலொமோனை ஆசீர்வதித்த தேவன் நம் தேவனல்லவா? உங்கள் வேண்டுதல்களை மட்டுமல்ல உங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றி உங்களை சந்தோஷப்படுத்துவார்.

Update: 2018-01-23 06:03 GMT
ம் தேவன் தான் நம்மை ஆசீர்வதிக்கிறார், அவர் நிரம்பி வழியும்படி எண்ணற்ற ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்புகிறவர். நாம் நம்முடைய குறுகிய வட்டத்திலிருந்து நம் தேவைகளைப் பார்த்து சந்தியும் ஐயா என ஜெபிக்கிறோம். ஆனால் நம் ஆண்டவரோ நம் ஜெபத்தை மட்டுமல்லாது நம் அனைத்துத் தேவைகளையும் சந்திக்கிற தேவன். ஏனெனில் நமக்கு என்ன என்ன தேவையோ அதையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார்.

சாலொமோனின் வேண்டுதல்

“அன்று ராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கிற ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.” (II நாளாகமம் 1:7,10)

சாலொமோன் ஆண்டவரிடத்தில் கேட்டது ஞானம் மட்டுமே. அவனுடைய அப்போதைய அத்தியாவசியமான தேவை ஞானம்தான். ஆனால் நம் ஆண்டவரோ ஞானத்தை அளவில்லாமல் அருளினது மட்டுமல்லாமல், அவன் கேளாத ஐசுவரியத்தையும், சம்பத்தையும், கனத்தையும், சத்துருக்கள் மேல் வெற்றியையும் தந்தார்.

சாலொமோனை ஆசீர்வதித்த தேவன் நம் தேவனல்லவா? உங்கள் வேண்டுதல்களை மட்டுமல்ல உங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றி உங்களை சந்தோஷப்படுத்துவார்.

அக்சாளின் வேண்டுதல்

“எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தர வேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.” (நியாயாதிபதிகள் 1:15)

அக்சாளுக்கு அவன் தகப்பன் நிலங்களைக் கொடுத்திருந்தான். ஆனால் அவைகள் வறட்சியானவைகள். எனவே தகப்பனிடம் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைத் தாரும் எனக்கேட்டாள். அவள் தகப்பனோ, கீழ்ப்புறத்தில் மட்டுமல்லாமல் மேற்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தார். நம் ஆண்டவரும் நமக்கு உன்னதத்தின் ஆசீர்வாதங்களினாலும் பூமிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்புகிறவர்.

“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.” (லூக்கா 11:13)

இந்நாளில் ஆண்டவர் உங்களை உலக ஆசீர்வாதம், செழிப்பு, ஆரோக்கியம், சமாதானம்... போன்ற ஆசீர்வாதங்களினால் நிரப்புவதுமின்றி, ஜெப ஆவி, தியான அபிஷேகம், வல்லமை, வரங்கள், ஆவியின் கனிகள் போன்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கூட தந்து உங்களை நித்திய ராஜ்யத்திற்கென்று தகுதிப்படுத்துவார்.

“அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங் களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.” ஆதி.49:25

எஸ்தரின் வேண்டுதல்

“ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தது, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.” (எஸ்தர் 7:3)

யூதகுல மக்கள் அழிக்கப்பட வேண்டுமென்கிற சட்டம் சூசான் அரண்மனையில் பிறந்தவுடனே ராஜாவினிடத்தில் எஸ்தர் ஜெபித்த வேண்டுதலை தான் நாம் வாசித்தோம். தன் ஜனங்களின் அழிவுக்காக, தேசத்தின் பாதுகாப்புக்காக எஸ்தர் ராஜாவினிடத்தில் மன்றாடி ஜெபித்தபோது ராஜ சட்டம் மாற்றப்பட்டு யூதமக்களின் ஜீவன் காப்பாற்றப்பட்டது. ஜனங்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டார்கள்.

ஆனால் எஸ்தருக்கும், மொர்தெகாய்க்கும் கிடைத்த ஆசீர்வாதங்கள் அளவில்லாதவை. ஆஸ்தியும், ஐசுவரியமும், கனமும் கூடக் கிடைத்தது.

ஆம், நாம் நம் தேசத்திற்காய் ஜெபித்தால் தேசம், மக்கள் மட்டும் தான் ஆசீர்வதிக்கப்படும். நம் வாழ்வு அப்படியேதான் இருக்கும் என தப்புக்கணக்குப் போடாதீர்கள். நிச்சயம் உங்களை உயர்த்தி, கனம் பண்ணுவார். நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாய் கிரியை செய்கிற நம் ஆண்டவர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! 

மேலும் செய்திகள்